Monday, April 15, 2013

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் 15 வருடங்களின் பின் கொழும்பை வந்தடைந்தது

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று 15 ஆண்டுகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை பகல் 12.45 மணியளவில் இலங்கை, கட்டுநாயக்க விமானநிலையத்தை  வந்தடைந்தது.
லண்டனின் கெட்விக் (Gatewick) விமானநிலையத்திலிருந்து மாலைதீவுக்குச் சென்ற குறித்த விமானம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.


ஜனாதிபதியின் தங்காலை இல்லத்தில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்டம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள புதுவருடத்தை நேற்று தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் கோலாகலமாக கொண்டாடினர்.
இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான  கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினரும் பங்கேற்றார்.
எனினும் மற்றைய சகோதரர்களான சாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவரும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் தனது 82 ஆவது வயதில் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மிகவும் இனிமையான பாடல்களை அவர் பாடியிருக்கின்றார்.

அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.

இரசாயன பகுப்பாய்வுக்கான திகதி அறிவிக்கவில்லை: சரவணபவன் எம்.பி.

தாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகை அச்சிடும் பகுதியை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

இலங்கைக்கு உதவியளிக்கையில் நிபந்தனைகள் விதிப்பதில்லை: இந்தியா

இந்தியா உதவிபெறும் நாடுகளின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதில்லை எனவும் தனது உதவிகளை கேட்கும் நாடுகளுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் போது எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான உதவியில் 20 வீதம் குறைப்பு: அமெரிக்கா

இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் 20 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி முன்மொழிந்துள்ளார்.

மனித உரிமைகள், மீள்கட்டுமானம், அரசியல் ஒன்றிணைவு ஆகியன தொடர்பாக உண்டாகியுள்ள கசப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் குறைப்பினை மேற்கொள்வதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Monday, April 8, 2013

167 அழைப்புக்களை மேற்கொண்டவருக்கு பிணை

ஓர் இளம் பெண்ணுக்கு தகுந்த காரணமின்றி 167 தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட இளைஞனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பெந்;தரவை சேர்ந்தவர் எனவும் இவர், குறித்த பெண்ணை தன்மீது காதல் கொள்ளச் செய்வதற்காக இரண்டு நாட்களுக்குள்  167 தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.



நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நிராகரித்தது.

நாகபாம்பு பெண் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 04 ஆம் திகதி பிறப்பித்தது.



இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி காலமானார்


பிரித்தானியாவின் முதற் பெண் பிரதமர் மாக்ரட் தட்சர் தனது 87 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்

1925 ஆம் ஆண்டு   ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி பிறந்த மாக்ரட் தட்சர் பிரித்தானியாவின் முதற் பெண் பிரதமராவார். ஆவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1979 முதல் 1990 வரை பிரதமராக பணியாற்றினார். இவர் பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பாரிசவாதம் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று காலமானார்.

றிசாத் எமது வேலையில் தலையிடுகிறார்: பாயிஸ்

அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் நகர அபிவிருத்தியில் தலையீடு செய்கின்றார் என புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் குற்றஞ்சாட்டினார்.

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது புத்தளம் நகரில் வாராந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டமை தொடர்பில் நகர சபை தலைவர் கருத்து தெரிவித்தார்.

வடக்கு கிழக்கை இணைக்கவும்: டெலோ மாநாட்டில் தீர்மானம்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைப்பாட்சி (சமஸ்டி) அரசியல் முறையின் கீழ் பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வே முன்வைக்கப்படல் வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை நனவாக்ககூடிய விதத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எம் இனத்தின் மரபுவழி தாயகம் இணைந்த வடக்கு கிழக்காகும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டிலேயே இந்த தீர்மானம் உட்பட மேலும் 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.